தமிழகத்தின் புதிய துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின், திமுகவின் வாரிசு அரசியல் குறித்த விவாதங்களை மீண்டும் எழுப்பியுள்ளார்!.
இன்றைய சூழ்நிலையில் வாரிசு அரசியல் என்ற மிகப்பெரிய விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உயர்திரு தமிழக முதல்வர் ஸ்டாலினோடு ஒப்பிடுகையில் அவரது மகன் உதயநிதி, அதிர்ஷ்டசாலி என்றே கூற வேண்டும். தந்தையைப் போல நீண்ட காலம் துணை முதல்வர் பதவிக்கு காத்திருக்க வேண்டிய அவசியத்தை அவரது தந்தை திரு ஸ்டாலின் அவர்கள் ஏற்படுத்தவில்லை.
வாரிசு அரசியல்:
என்னைப் பொறுத்தவரையில் வாரிசு அரசியல் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. ஒரு காலத்தில் சிங்க கூட்டங்களைப் போல பல ஆயிரம் சிறிய சாம்ராஜ்யங்கள் இருந்தது. அதே வழிமுறைதான் இன்றும் பின்பற்றப்படுகிறது. நாம் மாவட்டங்களாக பிரித்து தான் ராஜ்யம் செய்கிறோம். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு தலைமை இருக்கிறது. மனிதனின் அறிவு அவனுக்கு ஒரு தேசிய தலைமையை பெற்று தந்தது. தேசிய தலைமை சிங்க கூட்டங்களுக்கு தேவைப்படவில்லை. சிறிய ராஜ்யங்கள் மாநிலங்களாகவும், மாநிலங்கள் தேசமாகவும் மாறியது.
ஒரு சிறிய ராஜ்யத்தில் (மாவட்ட அளவில்) வாரிசு அரசியல் நடைபெறும் பொழுது அது பெரிதாக கண்டு கொள்ளப்படுவதில்லை. அதே வாரிசு அரசியல் மாநில அளவிலோ அல்லது ஒரு நாட்டின் அளவிலோ நடைபெறும் பொழுது விவாதத்திற்குரிய பொருளாக மாறுகிறது. சிறிய மாவட்டத்தில் வாரிசு அரசியல் தவறில்லை என்றால் மாநிலத்திலும் நாட்டிலும் வாரிசு அரசியல் தவறில்லை. மாவட்ட, மாநில அளவிலோ அல்லது நாட்டின் அளவிலோ தகுதி இல்லாத வாரிசு, தொடர்ச்சியாக அரசியல் செய்ய முடியாது தூக்கி எறியப்படுவார்கள். திரு டாக்டர் கலைஞரின் அரசியல் வாரிசுகளில் குறிப்பிடத்தக்க மூவர்கள்
மு.க அழகிரி, கனிமொழி கருணாநிதி மற்றும் திரு ஸ்டாலின் அவர்கள். ஆனால் மாநில தலைமைக்கு தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும் ஆற்றல் ஸ்டாலினிடம் மட்டுமே இருந்தது.
மாவட்டம், மாநிலம் அல்லது நாடு நல்ல வாரிசுகளின் கீழ் செல்லும் பொழுது நன்மை தான் ஏற்படும். நாம் இந்திரா காந்தியை குறை சொல்லி விட முடியாது. நாம் ராஜீவ் காந்தியையும் ஏற்றுக் கொண்டோம். இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தியின் வாரிசு அரசியலை ஏற்றுக் கொண்டோம். அதை எதிர்த்து அரசியல் செய்ய நாட்டில் ஆள் இல்லை. அதற்கான தேவையும் இருக்கவில்லை.
ஒரு நுட்பமான புரிதல்:
நான் ஒரு நுட்பமான புரிதலை கூற விரும்புகிறேன். ரஷ்யாவை மறு கட்டமைப்பு செய்தவர் விளாடிமிர் புடின். வீழ்ந்து கிடந்த ரஷ்யாவை தூக்கி நிறுத்தினார். இன்று அதிக அளவில் உலக மக்களால் விருப்பப்படும் ஒரு தலைவர். மேலோட்டமாக ரஷ்யாவை விளாடிமிர் புடின் மறு கட்டமைப்பு செய்தார் என்று கூறுகிறோம். ஒரு நாடு தனக்குத் தேவையான, தனது மறு கட்டமைப்பிற்கு தேவையான தலைவனை தானே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் ஆற்றல் படைத்தது. அதாவது ஒரு பிராந்தியத்தின் தலைவன் அந்த பிராந்தியத்தாலையே தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஒரு பிராந்தியம் தனது தலைவனை எப்பொழுது தானே தேர்ந்தெடுக்க தொடங்கும் என்றால் அதன் வரைமுறை மீறும் பட்சத்தில். ஆக ரஷ்யாவை விளாடிமிர் புடின் கட்டமைக்க வில்லை, ரஷ்யா தான் விளாடிமிர் புடின்யே தேர்ந்தெடுத்தது, அதாவது ரஷ்ய மண் தான் விளாடிமிர் புடின்யே கட்டமைத்தது அல்லது உருவாக்கியது.
வாரிசு அரசியலுக்கான அடிப்படை தகுதிகள்:
வாரிசு அரசியல்வாதிகள் முதலில் நெறிமுறை தொடர்பு (சமத்துவம், கல்வியறிவு, ஊழலின்மை, ஜனநாயக அறிவு) கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
இரண்டாவதாக தலைமை பண்பு, மக்கள் தாங்கள் அடைய வேண்டிய இலக்குகளை தெளிவாக வகுத்து அந்த இலக்குகளை அடைவதற்கான சரியான வழிகாட்டுதலை செய்யக்கூடிய ஆற்றல் உடையவராக இருத்தல்.
மூன்றாவதாக தனது பிராந்திய வளர்ச்சிக்கான கொள்கைகளை உருவாக்கும் திறன் கொண்டவராக இருக்க வேண்டும். தமது பிராந்தியத்தில் முதன்மையாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகளை தீர்ப்பதற்கான கொள்கைகளை உருவாக்கக் கூடிய திறன் படைத்தவராக நிச்சயமாக இருக்க வேண்டும்.
நான்காவதாக தேர்தல் யுக்திகளை வகுத்து கட்சியை வெற்றி பாதைக்கு இட்டுச் செல்லும் திறன் கொண்டவராக இருக்க வேண்டும். பிளவு பட்ட சமூகத்தில் அதிக தேர்தல் யுக்திகள் தேவைப்படுகிறது. ஆகவே பிராந்தியத்திற்குள் ஏற்படும் பிளவுகளை தவிர்க்க தெரிந்தவராக இருக்க வேண்டும்.
குடும்ப ராஜ்ஜியம் சரியா:
ஒரு நாணயத்திற்கு இரு பகுதி இருப்பதைப் போல, நல்லது கெட்டது இருப்பதைப் போல, வாரிசு அரசியலில் நல்லதும் கெட்டதும் இருக்கத்தான் செய்யும். பாலில் இருந்து தயிர் வருவது போலவும், தயிரிலிருந்து வெண்ணை வருவது போலவும், வெண்ணையில் இருந்து நெய் வருவது போலவும், ஒரு குடும்ப வளர்ச்சி இருக்கும். இங்கு ஒன்றிலிருந்து மற்றொரு பரிமாணத்திற்கு செல்ல முயற்சியும் காலமும் தேவைப்படுகிறது. இங்கு கவன குறைவு ஏற்படுமேயானால் அடுத்த நிலைக்குச் செல்ல முடியாது. மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டும். தூய நெய் போன்று அனைத்து விதத்திலும் பயன் தரக்கூடிய தலைவர்கள் தேவைப்படுகிறார்கள்.
சாதாரண மக்களைப் பொருத்தவரையில் தலைவர்கள் எப்படி வருகிறார்கள் என்றெல்லாம் பார்க்க மாட்டார்கள். அவர்கள் எப்படி ஆட்சி செய்கிறார்கள் என்று தான் பார்ப்பார்கள். வாரிசு அரசியல் வேண்டுமா, வேண்டாமா என்ற வாதங்கள் எல்லாம் பதவியைப் பிடிப்பதற்காக போட்டி போடுபவர்களிடம் மட்டுமே நடைபெறும். இவர்களின் சதவீதம் மிகவும் குறைவு. தொழில்நுட்ப வளர்ச்சியினால் இது பெரிதாக காட்டப்படுகிறது. மக்கள் வாரிசுகளுக்கே ஓட்டளிக்க விரும்புவார்கள். மனித வரலாற்றில் மக்கள் எப்பொழுதுமே நல்ல மன்னர்களை விரும்பி இருக்கிறார்கள் அவர்களை மிகவும் நேசித்து இருக்கிறார்கள். ஜனநாயகம் போர்களினால் அடிக்கடி ஏற்பட்டுக் கொண்டிருந்த மரணங்களை தவிர்த்து இருக்கிறது.
குடும்ப ராஜ்யத்தில் மற்றவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறதா?
மன்னராட்சி முறையில் அதிகாரத்திற்காக போட்டியிடுபவர்கள் உயிரை பனையம் வைக்க வேண்டிய அவசியம் இருந்தது. ஜனநாயக முறையில் அறிவுக்கு மட்டுமே வேலை. புத்தியை தீட்டினால் நல்லது! கத்தியை தீட்டினால்? மக்களால் தூக்கி எறியப்படுவார்கள். ஒரு மாநிலத்திற்கு அல்லது ஒரு நாட்டிற்கும் தலைவராக வேண்டும் என்பது உண்மையிலேயே மிகவும் கடினமான சவால் தான். ஆனால் ஒரு மாவட்ட அளவிலான தலைவர் ஆவதற்கு, அவ்வளவு கஷ்டப்பட வேண்டியதில்லை. வாரிசு அரசியல் அல்லது குடும்ப ராஜ்ஜியத்தில் மற்றவர்களுக்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்று கூறுவதற்கு இல்லை. மற்றவர்கள் சில நேரங்களில் பல தசாப்தங்கள் காத்திருக்க வேண்டி இருக்கும். உயர் பதவிகளுக்காக போட்டியிடுபவர்கள் மிகக் குறைந்த சதவீதத்தினர் என்பதை மறந்து விடக்கூடாது. போட்டியிடவும் காத்திருக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும்.
குடும்ப ராஜ்யத்தில் ஊழல்:
பதவி மற்றும் அதிகார போதை ஆடம்பரத்திற்கு காரணமாகிறது. ஆடம்பரம் ஊழலுக்கு காரணமாகிறது. மக்கள் தான் சிந்திக்க வேண்டும், ஒரு அமைச்சருக்கு எதற்கு இறக்குமதி செய்யப்பட்ட கார். இயேசு கூறுகிறார் நீ எவ்வளவு செல்வந்தனாக இருக்கிறாயோ அவ்வளவு இறைவனிடத்தில் இருந்து விலகி இருப்பாய். ஏழைகள் பாக்கியவான்கள் என்றார். பெரும் தொழில் அதிபர்கள் நாட்டின் அரசியலில் ஈடுபடுவதும், பெரிய அரசியல்வாதிகள் பெரும் தொழில்களில் ஈடுபடுவதாக கூறுவதும் ஜனநாயகத்திற்கு ஆபத்து.
இந்த இயற்கையின் கட்டமைப்பு எப்படி இருக்கிறது என்றால் யார் வேண்டுமானாலும் சரியாக முயற்சி செய்தால் ஒரு இலக்கை அடைந்து விட முடியும். மனித இனத்திற்கு அடைய முடியாத இலக்கு இருப்பதாக எனக்கு தெரியவில்லை.
ஒரு இலக்கில் இருக்கும் ஏராளமான வசதிகள் மனிதரை தவறிழைக்க தூண்டுகிறது. மருத்துவர் மற்றும் பொறியியல் நுழைவு தேர்வில் அரசு கல்லூரி கிடைத்துவிட்டால், இந்திய குடியுரிமை தேர்வில், பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் வென்று விட்டால். மாநில அல்லது மத்திய அமைச்சராகிவிட்டால். ஒரு சாதாரண அரசு வேலையில் சேர்ந்துவிட்டால். எப்பொழுதுமே சில இலக்குகள் பல வசதிகளை கொண்டிருக்கும்.
இலக்கில் இருக்கும் வசதிகள் மற்றும் ஆபத்துகளை புரிந்து கொள்ள இரண்டு உதாரணங்கள் தருகிறான்.
2001ல் நாங்கள் 25 ஆயிரம் ரூபாய் அரசாங்கத்திற்கு முன்பணம் செலுத்தி விவசாயத்திற்கு இலவச மின்சாரம் பெற்றோம். 25000 செலுத்திய விவசாயிக்கு இலவச மின்சாரம்! 25,000 பணம் திரட்டுவதை இலக்காக வைத்து விட்டால் விவசாயத்திற்கு இலவச மின்சாரத்தை பெற்று விடலாம். எங்கள் ஊரில் கிணறு இல்லாத குளத்தை நம்பிய விவசாயிகள் சிலர் இருந்தனர். எங்கள் ஊரில் மழைக்காலத்தில் நெல் சாகுபடி மட்டுமே விவசாயம் செய்ய முடியும். சரியாக நெல் (பொதி தள்ளும் நேரத்தில்) கர்ப்பம் அடையும் நேரத்தில் குளத்தில் நீர் வற்றி விடும். கிணறில்லாத விவசாயிகளின் நிலை, கிணறிருந்தும் மோட்டார் இல்லாத விவசாயிகளின் நிலை!? நான் இலக்கை அடைவதன் பலனை மிகச் சரியாகப் புரிந்து கொண்ட சந்தர்ப்பம் இது.
2014 கூகுள் நிறுவனம் தனது வணிக மின்னஞ்சல் மறுவிற்பனையாளரை நியமிக்க தொடங்கியது. அதற்கான சில வழிமுறைகளையும் வகுத்து வெளியிட்டது. அதை புரிந்து கொண்ட நான் மறுவிற்பனையாளராக முயற்சி செய்தேன். அதற்கு முதலில் தேவைப்பட்டது ஒரு கிரெடிட் கார்டு. யாரிடமும் வேலை செய்யவில்லை ஒரு புத்தகக் கடை நடத்திக் கொண்டிருந்தேன். இரண்டு மூன்று வங்கி மேலாளர்களை அணுகி எனது விருப்பத்தை வெளிப்படுத்தி கிரெடிட் கார்டு வேண்டும் என்று கேட்டேன். நீங்கள் யாரிடமாவது வேலை செய்ய வேண்டும் அல்லது உங்களுடைய ஐடி ரிட்டர்ன் வேண்டும் என்றார்கள். நான் ஒரு ஆடிட்டரை அணுகி ஐந்து ஆயிரம் செலவு செய்து மூன்று ஆண்டுகளுக்கு ஐடி ரிட்டர்ன் செய்தேன். நான் மிகத் தெளிவாக விண்ணப்ப படிவம் தயார் செய்து, ஏன் கிரெடிட் கார்டு வேண்டும் என்று தெளிவாக குறிப்பிட்டு. பதினைந்தாயிரம் லிமிட் கேட்டு கிரெடிட் கார்டு விண்ணப்பம் செய்தேன். 20 நாள் கழித்து உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என்று சொன்னார்கள். மனம் உடைந்து விட்டது கிட்டத்தட்ட ஆறு மாதம் முயற்சி செய்தேன். சில நாள் கழித்து கூகுள் தேடு பொறியில் ஐடி ரிட்டன் இல்லாமல் கிரெடிட் கார்டு பெறுவது எப்படி என்று டைப் செய்தேன். மிகவும் அவமானமாக உணர்ந்தேன் கிட்டத்தட்ட அனைத்து வங்கிகளுமே வைப்பு நிதியுடன் கூடிய கிரெடிட் கார்டு திட்டத்தை வைத்திருந்தது. கிட்டத்தட்ட ஏழு மாதம் தேவையில்லாத கிரெடிட் கார்டு பெறுவதற்கான முயற்சி செய்து இருக்கிறேன். ₹20,000 நிரந்தர வைப்பு செய்து 15 நாளில் நாளில் வேறொரு வங்கியில் கிரெடிட் கார்டு வாங்கினேன். எனது கோபம் வங்கி மேலாளர் மேல் திரும்பியது, என்றால் நான் விண்ணப்பம் செய்த வங்கியும் வைப்பு நிதியுடன் கூடிய கிரெடிட் கார்டு திட்டத்தை வைத்திருந்தது, நான் கோபத்தை காட்ட வில்லை. புரிந்து கொண்டேன், பதவியை அடைவதோ, பதவியில் இருப்பதோ முக்கியமில்லை, பதவிக்குரிய தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று. இலக்கை அடைவது முக்கியமில்லை இலக்கில் நிலைத்திருப்பதற்கான தகுதியே முக்கியம்.
ஆக வாரிசு அரசியலில் வருபவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்!, இந்திரா காந்தியை ஜவர்கலால் நேரு செதுக்கினார். இந்திரா காந்தி புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக டிஸ்கவரி ஆஃப் இந்தியா எழுதினார். இந்திரா நேருவின் கீழ் வேலை செய்து அனைத்து அரசியல்வாதிகளின் நாடி துடிப்பை உணர்ந்திருந்தார். யார் நல்லவர்கள், யார் கெட்டவர்கள், யார் ஊழல்வாதிகள் என்பதை தெளிவாக தெரிந்து வைத்திருந்தார். ராஜீவ் காந்தி மற்றவர்களால் அரசியலில் இழுத்து விடப்பட்டவர். அதில் அவருக்கு பெரிதாக விருப்பமும் இருக்கவில்லை. ஆனாலும் தனது கடமையை ஓரளவு மிகச் சரியாக செய்தார். விமான ஓட்டியாக இருந்ததால் தொழில்நுட்பத்தின் அவசியத்தை நன்கு உணர்ந்திருந்தார். சூப்பர் கம்ப்யூட்டரை இந்தியாவிற்கு வரவழைப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டு அது செயல்படுத்தினார். தகவல் தொழில்நுட்பத்திற்கு அவர் ஆற்றிய பங்கு குறிப்பிடும்படியாக இருந்தது அது எதிர்காலத்தில் வளர்ச்சிக்கு மிகவும் உதவியது.
அடுத்த வாரிசான ராகுல் காந்தி மன்மோகன் சிங்கிடமிருந்து காங்கிரஸ் ஆட்சி காலத்தில் எதைக் கற்றுக் கொண்டார் என்று தெரியவில்லை. வாரிசுகள் எத்தனையாவது தலைமுறை என்றும் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
குடும்ப ராஜ்யத்திற்கு மாற்று வழி? Alternate for Nepotism.
தொழில்நுட்ப வளர்ச்சி ஜனநாயக வளர்ச்சிக்கு மிக சிறப்பாக பங்காற்ற முடியும். இன்றைய சூழலில் தவறு செய்து விட்டு யாரும் அவ்வளவு எளிதில் தப்பி விட முடியாது. ஒவ்வொருவரின் செயல்பாடும், கல்வியறிவும் மிகவும் கூர்மையாக கண்காணிக்கப்படுகிறது. ஒரு இளம் அரசியல்வாதி இருக்கிறார் பொறியியல் துறையில் இன்ஜினியரிங், அகமதாபாத் ஐஐஎம் படிப்பு. அமெரிக்க தேசத்தில் அரசியல் மேற்படிப்பு, அத்தனை தகுதிகள் இருந்தும் தன்னை ஒரு பதவியில் நிலை நிறுத்திக் கொள்ள சிரமப்படுகிறார், அதற்குக் காரணம் தமிழகத்தில் இருக்கக்கூடிய ஜாதி மற்றும் வாரிசு அரசியலே. அவருடைய பின்னடைவிற்கு மற்றொரு காரணம் அவரின் அதீத நேர்மையும் அனுசரித்துப் போகும் தன்மையும். அவர் மகாகவி பாரதி கூறிய ரௌத்திரம் பழகு என்பதற்கான அர்த்தத்தை புரிந்து கொள்ளவில்லை. தற்கால சிறந்த கல்விமுறையும், கம்ப்யூட்டர் ப்ரோக்ராம் போன்ற சிறந்த கட்டமைப்பும், அமையும் பட்சத்தில் குடும்ப ராஜ்ஜியத்திலும் நல்ல மனிதர்களை உருவாக்கலாம், அவர்கள் நல்ல மனிதர்கள் இல்லை என்று தீர்மானிக்கப்பட்டால் பதவிக்கு வரும் முன்பே அவர்களை வெளியேற்றி விடலாம். மற்றவர்களுக்கான வாய்ப்பு கூடுதலாக கிடைக்கும்.
மீண்டும் உதயநிதிக்கு வருவோம்.
உதயநிதியை பொருத்தவரையில் கல்லூரி படிப்பு, காதல் திருமணம் பெரிய குற்றச்சாட்டு இல்லாத ஒரு வாழ்க்கை நடைமுறை. தனது 31 வயது முதல் 35 வயது வரை வெற்றிகரமான சினிமா தயாரிப்பாளர் என்ற முறையில் அமைத்துக் கொள்கிறார். நடிகர் விஜய் நடிப்பில் வெளியான குருவி, கே எஸ் ரவிக்குமாரின் ஆதவன் மற்றும் மன்மத அம்பு, முருகதாஸின் இயக்கத்தில் வெளிவந்த ஏழாம் அறிவு இவர் தயாரித்த சினிமாக்கள்.
சில முக்கிய சினிமாக்களான விண்ணைத்தாண்டி வருவாயா, மதராசபட்டணம், பாஸ் என்ற பாஸ்கரன், மைனா போன்ற படங்களின் விநியோகஸ்தராகவும் இருந்துள்ளார்.
உதயநிதியின் செயல்பாடுகள்: அரசியல் களத்தில் ?
கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் 2012 முதல் 2020 கிட்டத்தட்ட எட்டு படங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன்.தான் நடித்த அத்தனை படங்களின் வாயிலாகவும் ஏதோ ஒரு விதத்தில் மக்களை கவரத்தான் செய்தார். அவர் நடித்த படங்களான மன்னன் மற்றும் மாமனிதன் சமூகத்தின் பின்தங்கிய மக்களின் இடர்பாடர்களை தெளிவாக சுட்டிக்காட்டிய படங்களாகும். இந்த வகையான படங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம், அவற்றில் நடித்தது சமூகத்தின் பால் அவருக்கு ஒரு புரிதல் இருப்பதை தெளிவுபடுத்துகிறது. எல்லாவற்றையும் சந்தேகக் கண்ணோடு பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. உதயநிதி தன்னை எப்பொழுதும் சுறுசுறுப்பாளராகவும், மகிழ்ச்சியுடையவராகுமே வெளிப்படுத்தியுள்ளார்.
அரசியல் அதிகார பின்புலத்தில் பிறக்கும் குழந்தைகள் எப்பொழுதுமே தவறிப் போய் விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. அவ்வாறு எந்த ஒரு பெரிய குற்றச்சாட்டும் உதயநிதி மேல் வெளிப்படையாக இல்லை. சாணக்கியர் தனது அர்த்தசாஸ்திரத்தில் ஆள்பவன் அதிர்ஷ்டம் உடையவனாக இருக்க வேண்டும் என்கிறார். உதயநிதியை பொருத்தவரையில் தான் எடுத்த காரியங்களில் இன்று வரை வெற்றி பெற்றுள்ளார். இந்த அதிர்ஷ்டம் காலம் சென்ற விஜயகாந்த் இடமும் இருந்தது ஆனால் அவர் சூழ்ச்சியினால் வீழ்த்தப்பட்டார். அதிஷ்டம் பற்றிய உதாரணத்திற்காக விஜயகாந்தை குறிப்பிட்டேன். அரசியலில் நுழையும் பொழுது ஆரம்ப வெற்றி அவசியம்.
தமிழக அமைச்சரவையை பொறுத்தவரையில் இரண்டு அமைச்சர்களிடம் மட்டுமே தங்களுக்கான அமைச்சக செயல்பாடுகள் குறித்தான இணையதளம் உள்ளது ஒருவர் பி டி ஆர் அவர்கள், மற்றொருவர் உதயநிதி. நான் தேடிய வரையில் மற்ற அமைச்சர்களுக்கான துறை இணையதளம் கிடைக்கவில்லை.
என்னை பொருத்தவரையில் ராகுல் காந்தி மன்மோகன் சிங்கின் பத்து வருட ஆட்சியில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள தவறிவிட்டார். மன்மோகன் சிங் ஆட்சி காங்கிரசின் ஆட்சி தானே. அதே தவறை உதயநிதி செய்வாரோ என்று நினைத்தேன். ஏனென்றால் சந்தர்ப்பம் கிடைக்கும் போது அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உதயநிதியின் அதிர்ஷ்டம் அவருக்கு பதவி கிடைத்துவிட்டது.
திரு டாக்டர் கலைஞர் அவர்களுக்கு தன்னையும் தன்னைச் சுற்றியுள்ளவர்களையும் பாதுகாக்க வேண்டிய ஒரு கட்டாயம் இருந்தது. அதனால் அவர் எம்ஜிஆர் இடமும் ஜெயலலிதாவிடமும் 25 ஆண்டுகள் தனது பதவியை இழந்தார்.
ஒரிசாவின் நவீன் பட்நாயக், குஜராத்தின் நரேந்திர மோடி, மேற்கு வங்கத்தின் ஜோதி பாசு, ரஷ்யாவின் புடின, அமெரிக்காவின் எண்ணற்ற ஜனாதிபதிகள் மறு தேர்தலில் வெற்றி பெற்றனர். அதற்கான காரணம் அவர்கள் மக்களைப் பற்றி அதிகம் சிந்தித்தது. தங்களது மாநில, நாடுகளின் வளர்ச்சியை பற்றி அதிகம் சிந்தித்தது.
ஆட்சியில் இருந்து ஜெயலலிதா தூக்கி எறியப்பட்டார். அவரால் தனது பதவியை தொடர்ச்சியாக தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. ஒரு இலட்சிய பதவியை அரசியலில் அடைவது என்பது மக்களுக்கு வேலை செய்வதற்கான தொடக்கமே தவிர அதிகாரத்தை அனுபவிப்பது அல்ல. அவ்வாறு அதிகாரத்திலும், சுக போகங்களிலும் திளைப்பவர்கள் ஜனநாயகத்தில் தூக்கி எறியப்படுவார்கள்.
திரு டாக்டர் கலைஞர் அவர்களின் மேல் சில குற்றச்சாட்டுகள் இருந்தாலும் அவர் தமிழக சமூக பொருளாதார வளர்ச்சிக்காக செய்த செயல்கள் அற்புதமானவை. இன்றும் கோடிக்கணக்கான பேர் கலைஞருக்கும் கழகத்திற்கும் விசுவாசியாக உள்ளதை நாம் அறிய முடிகிறது. அனைவரும் ஏதோ முட்டாள்தனமாக விசுவாசியாக இருக்கவில்லை, ஒவ்வொருவரும் ஏதோ ஒரு விதத்தில் ஒரு பலனை அடைந்தவர்கள். ஆகவே கலைஞரை நேசிக்கிறார்கள். அதனால் தான் கலைஞரின் மகனுக்கும், பேரனுக்கும் தமிழக ஆட்சி அதிகாரம் கிடைத்துள்ளது.
திரு உதயநிதி அவர்கள் மக்களின் தேவைகள் மற்றும் வேண்டுகோளை புரிந்து கொண்டு சேவையாற்றுவார் என்று நிச்சயமாக நம்புவோம்.
அவர் இன்னும் முழுமையாக தன்னை நிரூபிக்காத ஒரு தலைவர் என்ற நிலையிலேயே இருக்கிறார். காத்திருந்து பார்ப்போம். எனக்கென்னமோ உதயநிதி சுதாரித்துக் கொள்வார் என்று தான் தோன்றுகிறது.
திரு அண்ணாமலை:
ஒரு ஐபிஎஸ் அதிகாரிக்கு இருக்க வேண்டிய அனைத்து தகுதிகளும் சிறப்புர பெற்றவர். மோடிக்கான, மோடியின் தமிழக வாரிசு! என்ற இரண்டு தகுதிகளுடன் வலம் வந்து கொண்டிருப்பவர்.
நான் இவரது பல பேட்டிகளை பார்த்திருக்கிறேன், ஏதோ ஒரு அன்பும் பண்பும், ஒருவித நியாயமும் உள்ளவராக வலம் வருகிறார். தற்கால ஊடகவியலாளர்கள் எதிர்கொள்வது மிக கடினம், அவர்களை சிறப்பாக எதிர்கொள்கிறார். மோடியின் நேரடி பார்வையில் இருப்பதால் அஷ்ட லட்சுமிகளில் இரு லட்சுமி களான ஜெயலட்சுமி மற்றும் விஜயலட்சுமியின் அருள் பெற வாய்ப்பு உள்ளது.
அவருக்கு இருக்கின்ற மிகப்பெரிய பலவீனம் அவர் ஒரு கொங்கு மண்டலத்தைச் சார்ந்தவர் என்பதுதான். இவர் தனக்கான அரசியல் விபூக்கும் வகுப்பதில் சொதப்புகிறார். கடந்த முறை பாராளுமன்ற தேர்தலில் நின்றது மிகப்பெரிய தவறு, அதுவும் கோவையில்! ஒருவேளை பாரதிய ஜனதாவின் தலைமை இவரை கோவையில் நிறுத்தி இருக்குமேயானால் அவர்கள் தமிழக மக்களின் மன ஓட்டத்தையும் அண்ணாமலையின் மன ஓட்டத்தையும் புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். தமிழக அரசியல் களத்தில் மிகக் கடினமான சவால்களை எதிர்கொள்ள காத்திருக்கும் தலைவர் அண்ணாமலை. பாரதிய ஜனதா அண்ணாமலையை தமிழகத்தில் பொசிஷன் செய்வதில் சொதப்புகிறது.
சீமான்:
எனது பார்வையில் இவர் முதலில் பிரபாகரனை விட்டு விடுவது நல்லது. தமிழகமும், இந்தியாவும் இலங்கை தமிழர்களுக்கு எதுவுமே செய்ய வேண்டாம். அவர்களைப் அவர்களே பார்த்துக் கொள்ளட்டும். இலங்கைத் தமிழர்கள் என்று அழைப்பதை நிறுத்தி, சிங்கள தமிழர்கள் என்று அழைப்பதுவே சரியாக இருக்கும். இந்த வார்த்தையில் ஒரு மாயாஜாலம் இருக்கிறது அது அவர்களுக்கு நன்மை பயக்கும்.
இவரது பிராந்திய அரசியல் கொள்கையும், மிகச்சிறந்த நகைச்சுவை உணர்வுடன் கூடிய விவாதங்கள் புரிவதில் வல்லவராகவும் இருக்கின்ற காரணத்தினால் பொதுவாக அனைத்து மக்களாலும் இவர் ரசிக்கப்படுகிறார். இவரது மாநில வளர்ச்சிக்கான திட்டங்களும் பொருளாதாரக் கொள்கைகளும் சர்வதேச சமூகத்தோடு ஒத்துப் போவதாக இல்லை. தமிழகம் போன்ற ஒரு மாநிலத்தில் புதிதாக அரசியல் செய்ய வேண்டுமானால் ஒரு மிகச்சிறந்த பொருளாதார தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவை தன்னோடு வைத்திருக்க வேண்டும் அதை இவர் செய்த மாதிரி தெரியவில்லை. தமிழகம் உலக பொருளாதாரத்தோடு பின்னிப்பிணைந்திருக்கிறது. அவற்றை சீமான் சரியாக புரிந்து கொள்ள வேண்டும், ஊழலுக்கு எதிரான அவருடைய நிலைப்பாட்டை மிகத் தெளிவாக கூற வேண்டும். சீமான் வை கோபாலசாமியை போன்றே மாவட்ட தலைவர்களை கட்டமைப்பதில் தோல்வியுறுகிறார் என்று எண்ணினேன். என்ன அதிசயம் இன்று காலை யூடியூபில் பார்த்தேன், ஏதோ ஒரு மாவட்ட தலைவர் 16 ஆண்டுகளாக இக்கட்சியில் இருக்கிறேன். நான் அங்கீகரிக்கப்படவில்லை என்று பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார்.
உதயநிதி: உதயநிதி தகவல் தொழில்நுட்பத்தை இன்னும் சிறப்பாக பயன்படுத்த வேண்டும். உதயநிதிக்கும் திமுகவிற்கும் அரசியல் எதிர்காலம் மிகச் சிறப்பாக உள்ளது. ஊழலில் இருந்து கட்சியை எப்படி மீட்டெடுக்க போகிறார், கலைஞரை விட தெளிந்த அறிவுடையவர் உதயநிதி. அவரது நண்பர் மகேஷ் பொய்யா மொழி மீது எந்த பெரிய ஊழல் குற்றச்சாட்டும் இல்லை.
பி டியாருக்கும் இருவருக்கும் ஒரு நல்ல தொடர்பு இருக்கும் போல தெரிகிறது. ஆனால் தேர்தல் பிரச்சாரங்களில் அதிக பொய் பேசுகிறார் அல்லது ஒரு மூன்றாம் கட்ட தலைவரை போல பேசுகிறார். கலைஞரை விட சிறந்த அறிவாளி என்று கூறினேன்! , உண்மையில் அறிவாளி தனது தவற்றை திருத்திக் கொள்வார். இங்கு ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன் திரு ஸ்டாலின் அவர்கள் எழுதி வைத்து பேசுகிறார் என்று பலர் அவரைக் கிண்டல் அடிக்கிறார்கள். அது தேவையில்லை அவரது வயதிற்கு மதிப்பு அளிப்போம். அவர் தன்னை சிறந்த பேச்சாளராக மாற்றிக் கொண்டார் என்பதை மறுப்பதற்கு இல்லை. சில சொற்பொழிவுகளை கேட்டு இருக்கிறேன் சிறப்பாக பேசினார். திரு
ஸ்டாலின் சிறப்பாக எதிர் அரசியல் செய்கிறார் என்பதை மறுப்பதற்கு இல்லை. அவர் மிகுந்த நிதானத்துடன் செயல்படுகிறார். அவருக்கு இன்னும் மதிப்பிற்குரிய ஆலோசகர்கள் தேவை.
உதயநிதியின் பங்களிப்பு பத்தாது. அவரிடமிருந்து நிறைய தொலைநோக்குத் திட்டங்கள், மாநில வளர்ச்சி, கல்வி வளர்ச்சி, சமூக ஒருமைப்பாட்டிற்கான கோட்பாடுகள் போன்றவற்றை நாம் எதிர்பார்க்கிறோம். தமிழக அரசின் 1 ட்ரில்லியன் எக்கனமி மிக அற்புதமான திட்டம். அது பி டி ஆரின் திட்டம் என்பதை அனைவரும் அறிவார்கள்.
நன்றி,
உங்கள் கருத்துக்களை கமெண்டில் பதிவிடுங்கள்.
Comments